Wednesday, February 15, 2012

Of dead seas and Indian independent films - Bollywood


Mumbai: "Whether we see our wives or not, we see a dead body every day," complains a policeman inspecting the body of a fisherman who has been shot at sea by the Sri Lankan Navy. That one line in Leena Manimekalai's film 'Sengadal' ('The Dead Sea'), the only Indian film in the international competition in the just-concluded Mumbai Film Festival, seems to sum up not just this movie, but Indian films in general.
Whether you see good cinema in India or not, you invariably get to see tactless blockbusters every Friday, could be a common complaint of any cinema fan in India.
And nowhere is this metaphoric example more evident than in Manimekalai's film, which from many perspectives, like technical aspects and even scripting may not be one that is up there, but there is no denying that this is an important film that needed to be made.
Of dead seas and Indian independent films
"Sixty percent of the film was illegally shot. We had to resort to guerilla style of filmmaking to finish it," Manimekalai's told IANS.
'The Dead Sea' is a tale of Sri Lankan Tamils fleeing to India, only to face persecution here.
Secondly, the fishermen community of Rameshwaram who venture out to sea, are blatantly shot, beaten and in a few cases, have even sexually assaulted by the Sri Lankan Navy for no apparent reason. They also do not get much support from the Indian authorities. With over 600 dead or missing fishermen, it is an extreme example of living in the fringes.
Manimekalai wanted to show an honest story. Hence you have real people almost playing themselves and their lives to the T. The result is a film that may be far from cinematic accomplishment, but the one accusation that cannot be levied on it is of being dishonest.
If you were to see footages of film stars, you'd obviously want them in HD. Yet on the same TV, you don't mind the grainy images of a terrible atrocity that makes breaking news. In that light, 'The Dead Sea', that gives voice to the most marginalised of the marginalized lot, becomes an extremely important film.
In an ideal world, it would have enjoyed better resources. But neither has the film been made in an ideal world, nor is Indian cinema in a similar state with most film made and released only solely commercial intentions.
Yet, this year's Mumbai Film Festival provided an interesting contrast and an example of where Indian cinema is headed. Around 15 percent of films in the festival were Indian. They were put in three sections 'Indian Frame', 'New Faces In Indian Cinema' and 'Film India Worldwide'.
The range of films in these sections reflected the variety of films which sadly, like the fishermen in the film, lie on the fringes of Bollywood.
Despite receiving rave reviews from festival viewers, the fate of most of these films are doubtful, just like the fishermen in 'The Dead Sea'.
"The fishermen of this community on which this film is based, are facing extinction," says Manimekalai. One hope this is not the case with these independent films.
(For updates you can share with your friends, follow IBNLive on FacebookTwitter andGoogle+)

Saturday, February 4, 2012

இனத்துரோகி என்னும் பட்டத்தை ஏற்கத் தயார் – லீனா மணிமேகலை நேர்காணல்

http://www.hellotamilcinema.com/index.php?option=com_content&view=article&id=569%3A2012-02-02-11-26-33&catid=37%3Agetaways&Itemid=397



மாற்று சினிமா என்பது நெருப்பு ஆறு. இங்கே யாருக்கும் அதன் அருகில் போகத் துணிச்சல் இல்லை. லீனா அந்த நெருப்பாற்றை நீந்திக் கடந்து கொடியை நாட்டியவர்.

சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் சில இயக்குனர்களில் ஒருவர்.

ராமேஸ்வரம் கடல் பரப்பில் இன்று விழும் ஒவ்வொரு பிணத்தையும் மருத்துவ அறிவைக் கொண்டல்ல; சர்வதேச அரசியல் அறிவைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை தன்னுடைய செங்கடல் படம் மூலம் உருவாக்கிக் கொண்டிருப்பவர்.

சமீபத்தில் "இளங் கலைஞர்களுக்கான சார்ல்ஸ் வாலஸ் விருது" பெற்று லண்டன் பல்கலைக் கழகத்தில் Visiting Scholar ஆக UK விற்குப் பறந்து சென்றவரை தரையிறங்கும் முன் ஒரு நேர்காணலுக்காகப் பிடித்தோம்.
எப்போதும் உரையாடலுக்குத் தயாராக இருப்பது லீனாவின் பெருமைகளில் ஒன்று.

இனி நேர்காணல்
செங்கடல் என்னும் இந்தக் கதை களத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? உலகத்திற்கு என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தீர்கள்?

செங்கடல், சாட்சியாகவும், கதைசொல்லியாகவும் நான் நிற்கும் இடம். தனுஷ்கோடி என்பது ஒரு அசுரத்தனமான மணல் காடு. அங்கு ஓயாமல் சுழன்றடிக்கும் காற்றில் தங்கிவிட்ட ஓலமும், முகத்திலப்பும் மணல் துகள்களின் கதைகளும் தான் என்னை செங்கடலுக்கு இழுத்து சென்றது.

மார்ச் 2009லிருந்து தனுஷ்கோடி நோக்கிய என் பயணமும் தேடலும் இன்றும், என்றும் முடியுமா தெரியவில்லை. புயல் அழித்த நகரத்தின் சிதிலங்களை வீடாக கொண்ட தனுஷ்கோடி கம்பிப் பாடு கிராம மீனவர்களின் குசினிகளில் உண்ட மீனும் நண்டும் இன்னும் என் கைகளில் வாசனையாய் மணக்கிறது. சராசரி ஒவ்வொரு மூன்று மீனவக் குடும்பங்களிலும் ஒரு விதவையையாவது, அல்லது மகனை இழந்த தாயையாவது பார்க்க நேர்ந்தது தான் செங்கடலை எழுத தூண்டியது. தமிழ் என்ற மொழியை பேசுவதாலும், கறுப்பாய் இருப்பதாலும் மட்டுமே அடித்து நொறுக்கப்பட்ட, கொல்லப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, சிறையிலடைக்கப்பட்ட இந்திய  மீனவர்களின் கதைகளை நான் கேட்டு வெறும் மௌன சாட்சியாகி போகாமல், பல ஆயிரம் செவிகளுக்கும், கண்களுக்கும், மனசாட்சிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையே செங்கடலை திரைப்படமாக்க தூண்டியது.

நீங்கள் எதைச் செய்தாலும் தமிழரங்கில் அது சர்ச்சையை உண்டாக்கும். ஷோபா சக்தி என்ன செய்தாலும் சர்வதேச தமிழ் அரங்கில் அது சர்ச்சையை உண்டாக்கும். இருவரும் சேரும்போது சர்ச்சை அதிகமாகுமே? எந்த எண்ணத்தில் சேர்ந்து செயல்படலாம் என்று முடிவு செய்தீர்கள்?
சர்ச்சைகளால் நட்பு உருவாகுமா என்ன? தமிழ் சூழலில் ஒரு நோய்த்தன்மை உண்டு. மொத்தத்துவப்படுத்துவது, அல்லது தனிமைப்படுத்துவது. செயற்பாட்டாளர்களை ஏதாவது முத்திரை குத்தி அவரவர்களுக்கான வசதியான பைகளில் போட்டு வைத்துக் கொள்வதென்பது அவதூறோ, தனிநபர் தாக்குதல்களோ, ஒழுக்கவாத குற்றச்சாட்டுகளோ செய்வதற்கு வசதியாகவும், ஏதுவாகவும் இருக்கிறது. மற்றபடி எனக்கும் ஷோபாவுக்கும் இருக்கும் ஒற்றுமை அரசியல் பிராணிகளாக இருப்பது தான் என்று நினைக்கிறேன்.  எங்களிடையே அன்பும், அக்கறையும் தோழமையும், நிரம்ப மரியாதையும், கூடவே வேறுபாடுகளும் முரண்களும் நிச்சயம் உண்டு. இணைவும், பிரிவும் கண்ணாடியும் கல்லும் போன்றது தான் என்பதையும் தெரிந்தே வைத்திருக்கிறோம்.

செங்கடலில் இணைந்து பணியாற்றினோம், சாத்தியமற்ற சிலவற்றை செய்து பார்ப்பதற்கு அந்த இணைவின் ஆற்றல் கை கொடுத்தது. இது தொடருமென்றே நம்புகிறேன். மூன்று வருட நட்பு, பணியும் பயணங்களுமாய் நீடித்தாலும் அவரிடம் கற்க வேண்டியது இன்னும் ஏராளம் இருக்கிறது.

திரைக் கதையில் ஷோபாசக்தியுடன் இணைந்து பணியாற்றியது எவ்வகையில் சரியாக இருந்தது?

ஒரு வருடமாக இந்த மக்களோடு அலைந்து திரிந்து, தரவுகளை சேகரித்து, மணிக்கணக்காய் நேர்காணல்கள் செய்து, சமைத்து, உண்டு, குடித்து, உறங்கி, வாழ்ந்து தான் கதையை எழுதி முடித்தேன். படத்தின் ஒவ்வொரு பிரேமும் அம்மக்களின் வாழ்வும் நினைவும் தான். திரைக்கதையாக உருவாக்க நினைத்த் போது ஜெரால்டிடம் உதவி கேட்டேன். சினிமாவைப் பொறுத்தவரை எனக்கு ஆசிரியத் தோழன் ஜெரால்டு. அவர் ஒரு டிராப்ட் எழுதினார். நான் அதை திரும்ப மறுபிரதியாக்கம் செய்தேன். திரைப்படத்தின் பிண்ணனி ஈழ அரசியல் என்பதுவும், அகதிகள் கதாபாத்திரங்கள் உருவாக்கம் மற்றும் ஈழத்தமிழ் வசனங்கள் இவற்றில் ஒரு ஈழ எழுத்தாளரின் பங்கு இருக்கவேண்டும் என்ற எண்ணமும் தான் எங்களை சோபசக்தியிடம் சென்று சேர்த்தது. தற்கால தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த கதைசொல்லி ஷோபாசக்தி என்பது என் அபிப்ராயம். இப்படி ஜெரால்ட், ஷோபா, மற்றும் நான் என மூவரும் இணைந்து பிரதியை மாறி மாறி எழுதிப் பார்த்து உருவாக்கப்பட்டது தான் செங்கடல் திரைக்கதை.

திரைப்படத்தில் சூரி என்ற அகதி கதாபாத்திரம், ஷோபா சக்தியில்லை என்றால் சாத்தியப்பட்டிருக்காது. ஒரு சமூகத்தில் உக்கிரமான போர்ச்சூழல் ஏற்படுத்தியிருக்கும் மனப்பிறழ்வின் குறியீடு சூரி. தனுஷ்கோடி மீனவர்களையும், மண்டபம் அகதிகளையும் அவரவர் வாழ்வில் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்களையே, திரையிலும் ஏற்க வைத்ததனால் பல பயிற்சி பட்டறைகள் நடத்த வேண்டியிருந்தது. மக்கள் வாழ்வு திரைக்கதையாவதும், திரைக்குழு - மீனவர்களும், அகதிகளுமாவதும் என்று கூடு விட்டு கூடு பாய்ந்து தான் செங்கடல் என்ற ரசவாதம் நடந்தேறியது. 

நடிகர்கள் தேர்வு செய்திருக்கிற விதமும் அவர்களிடம் மிகச் சிறந்த நடிப்பை பெற்றிருப்பதும் இந்தப் படத்தின் முக்கிய பலமாக இருக்கிறது. நடிகர்கள் தேர்வு குறித்து என்ன முடிவு செய்திருந்தீர்கள்? என்னென்ன முயற்சிகளுக்குப் பின் இது சாத்தியமானது?

ஒரு சில கதாபாத்திரங்கள் தவிர இதில் நடித்த எல்லோரும் தனுஷ்கோடி, ராமேஸ்வர மக்களும், மண்டபம் அகதிகளும் தான். ஒவ்வொரு முறையும் அகதிகளை மண்டபத்திலிருந்து, நேவி போலிஸ் கெடுபிடிகள் தாண்டி  தனுஷ்கோடி அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்துவதென்பது ஒரு மிஷன் இம்பாசிபில் போல தான் நடந்தேறும். படத்தில் போலீஸ் கதாபாத்திரங்கள் ஏற்ற பாதி பேர் ராமநாதபுர மாவட்டத்தில் போலீஸ் ஆகும் கனவோடு தினமும் கர்லாக் கட்டை தூக்கி பயிற்சி செய்துக் கொண்டிருந்த இளைஞர்கள், மற்றும் கிடாத்திருக்கை கிராமத்து தெருக்கூத்துக் கலைஞர்கள். மற்றும் திரைப்படக்குழுவின் சமையல்காரர், வாகன ஓட்டுனர்கள் என இறுதி உறுப்பினர்கள் வரை எல்லோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். கடுமையான சவால்கள் நிறைந்த தேர்விது. இன்னொரு படத்தை இப்படியான முறையில் என்னால் செய்ய முடியுமா என்று தெரியாது. ஒரு நூறு அகதிகளை சந்தித்து பேசி, புகைப்படமெடுத்து, வீடியோ எடுத்து, அவர்களுக்கு அதை காட்டி திருத்தங்கள் செய்து, ஸ்க்ரிப்டை சொல்லி, பட்டறைகளை நடத்தி, ஒரு ஐந்து பேரை தேர்வு செய்திருப்போம், ஆனால் படப்பிடிப்பின் போது அந்த ஐந்து பேரில் மூன்று பேர் தான் வந்து சேர்வார்கள். மற்ற இருவரை பிறகு கண்டே பிடிக்க முடியாது. களவாய் ஆஸ்திரேலியா போய் விட்டார் ஒருவர் என்பார்கள். இன்னொருவர் வேறு வேலை கிடைக்காததால் சும்மா வந்தார், மற்றபடி அவருக்கு வேறு வேலை கிடைத்துவிட்டதென்பார்கள். படப்பிடிப்பு நடக்கும்போதே என் பொண்டாட்டியை எப்படி வேறொருவனின் மனைவியாக நடிக்க வைக்கலாம் என சண்டை நடந்திருக்கிறது. குழந்தையாக நடித்த சிறுமி வயதுக்கு வந்துவிட்டதால், இனி வர மாட்டாள் என்று புதிய பிரசினை வரும். தலைவலிக்கிறது என்றொரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் மீனவர் நடுவே தலைமுடியை வெட்டிக் கொண்டு வந்துவிடுவார். அவருக்கு முடி வளரும்வரை காட்சி காத்திருக்கும். மனைவிக்குப் பிடிக்கவில்லை என்று சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொண்டு வருவார்கள் மீனவர்கள். காட்சியை கைவிட வேண்டியிருக்கும். வசனங்களை ஒரே போல வேறு கோணங்களுக்காக மக்களை பேச வைக்க முடியாது. ஷாட் டிவிஷனை நினைத்த மாதிரி எப்போதும் எடுக்க முடிந்ததில்லை. மிஸ் ஆன் சீன் என்று சொல்லப்படும் காட்சியாக்கம் மக்கள் போக்கில் தான் எடுக்க வேண்டியிருக்கும். கன்டினியுட்டி பஞ்சாயத்துகளால் உதவி இயக்குனர்கள் வேலையை விட்டே ஓடியிருக்கிறார்கள்.

மக்கள் பங்கேற்பு சினிமா என்பது ஒரு எளிய விஷயமில்லை. கேமிரா கோணத்திலிருந்து, பேசும் வசனத்திலிருந்து, உச்சரிப்பு, பாவனை, கலை, என்று படமாக்கலின் ஒவ்வொரு நுணுக்கமும் திரைக்குழுவும், மக்களும் எடுக்கும் கூட்டு முடிவாகத் தான் இருக்க முடியும். இது ஆசிரியப் பிரதியல்ல. இதை கேமிராமேனும், லைவ் சவுண்ட் பதிவுக் கலைஞரும், இயக்குனரும், இணைந்த ஆசிரியக் குழு மனமொட்டி முடிவெடுத்து மக்கள் போக்கில் தொழில்நுட்பத்தை, கலையை பிரதியாக்கம் செய்தால் மட்டுமே செங்கடல் போன்ற ஆக்கங்களை சாத்தியப்படுத்த முடியும்.

இந்தப் பட வேலைகளை துவங்கிய நாளிலிருந்து நிறைய இக்கட்டுகளைச் சந்தித்து வந்தீர்கள்? ஏன் இவைகளெல்லாம் நடக்கிறது? இவைகளைப் பற்றி இப்பொழுது என்ன நினைக்கிறீர்கள்?
நான் செய்வது எதுவும்  சந்தைக்கான பொருளல்ல. நான் "பிலிம் இண்டஸ்ட்ரியை" சேர்ந்தவளுமல்ல. மந்தைக்கு தப்பின ஆட்டுக்கு மேய்ப்பனும் இல்லை, வேலியும் இல்லை. பலி கொடுக்கப்படாமல்  ஒரு ஆடு தப்புவதை சமூகம் பார்த்துக் கொண்டிருக்குமா என்ன?

திரைக்கதை இல்லாமல் படப்பிடிப்பு நடத்தி, ஆனால் நேர்த்தியான திரைக்கதையைக் கொண்டு உருவாக்கிய படத்தைப் போன்ற தோற்றத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள்? இது எப்படி சாத்தியமானது? இந்த வடிவ நேர்த்தி எப்படி சாத்தியமானது?
இந்த படத்தை சுற்றி அது ஆவணப்படமா? கதைப்படமா? படமே இல்லையா? என்றெல்லாம் விவாதங்கள், ஏற்புகள், நிராகரிப்புகள் எல்லாம் நடக்கின்றன. வடிவம் என்பது ஒரு கலைஞனின்  கையிலிருக்கும் ஒரு கோல் தான். அதுவே நிர்ப்பந்தமாக முடியாது. சொல்ல நினைத்ததை நேர்மையாகவும் விட்டுகொடுத்தலில்லாமலும் சொல்வதற்கு் எந்த வடிவம் கை கொடுக்கிறதோ அதைக் கையாள்வது தான் சரியாக இருக்க முடியும். டாக்குமெண்டிங் பிக்சன் என்பார்கள். செங்கடலுக்கு அந்த உத்தியே சரியென நம்பினேன். செய்தேன். ஒரு ஆத்தராக இந்த படைப்பில் யாரையும் நான் பிரதிநிதிப்படுத்தவில்லை. எடுத்துக் கொண்ட வாழ்வோடு உணர்வு பரிமாற்றம் செய்ய தலைப்பட்டேன் என சொல்லலாம்.

நீங்கள் நிறைய ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறீர்கள்? இந்தப் படம் இயக்கும் போது புதிதாக என்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது?
இதுவரை நான் செய்த ஆவணப்படங்களும் பல சிக்கலகளுக்கு நடுவில் தான் உருப்பெற்றன. ஆனால் அவை மிக குறைந்த செலவில் செய்யப்பட்டவை. ரேடியோ ஜாக்கி, தொலைக்காட்சி துறை வேலைகள் செய்வது, தனியார் திரைப்படக் கல்லூரிகளில் பாடம் எடுப்பது போன்ற வேலைகளைப் பார்த்து வரும் ஊதியத்தில் சேமித்தே அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். திரைப்பட விழாக்களுக்கு செல்வது எப்போதும் அந்தந்த விழாக்குழுவின் பொறுப்பென்பதால் பெரிய சுமை இருக்காது. ஆனால் செங்கடல் முழுநீள கதைப்படம். முதலீடு அதிகம். போட்டியும் அதிகம். முழுநீள திரைப்பட சர்க்கியூட்டில் தாக்குப் பிடிக்க குறைந்தபட்ச பின்புலமாவது அவசியப்படுகிறது. மொத்த பட்ஜெட்டில், முப்பது சதவிகிதமாவது படத்தை பரவலாக கொண்டு செல்வதற்கு அவசியப்படுகிறது.சரியான தயாரிப்பு பின்புலம் இல்லாமல் இத்தகைய முயற்சிகளில் இறங்குவதென்பது நம் சூழலில் தற்கொலைக்கு சமம். எந்த வகையிலும் உயிர் தப்பிவிடக் கூடாதென்று எல்லா சக்திகளும் நெட்டித் தள்ளும். ஊதியம் இல்லாமல் வேலை பார்க்கலாம். ஆனால் நம்பிக்கை துரோகம், அவமானம், ஒவ்வொன்றுக்கும் பிச்சை எடுக்காத குறை என்று வெறும் அவநம்பிக்கையை மட்டுமே சந்தித்த காலம் செங்கடல். எனக்கிருந்த ஒரு சில மிகச்சிறந்த நட்புறவுகள் தோள் கொடுக்கவில்லையென்றால் இந்தப்படம் சாத்தியப்பட்டிருக்காது. ஒரு சிங்கிள் மதரின் போராட்டமாக கூட இந்தப் படத்தை பார்க்கலாம். குழந்தை தங்காதென்பார்கள், அபார்ட் செய்யென்பார்கள், குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதென்பார்கள். குழந்தை பிறந்தால் தாய் செத்துவிடுவாள் என்பார்கள். பிறந்தவுடன், இது பெண்குழந்தை, கொன்றுவிடென்பார்கள். ஆனாலும் அந்த குழந்தையை தாய் மட்டுமே நம்பி, போராடி வளர்ப்பார். செங்கடலை எல்லோரும் கைவிட்டார்கள். நான் எப்போதும் விடவில்லை.

நீங்களே இந்தக் கதையில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள். உங்களையே நீங்கள் தேர்வு செய்து கொண்டதன் காரணம் என்ன?

செங்கடலின் மெடா பிக்ஷன், படம் நெடுக வரும் ஒரு ஆவணப்பட இயக்குனரின் பகுதி. அந்த கதாபாத்திரத்தை நானே செய்வது சரியென மனதில் பட்டது. செய்தேன். ஆனால் அது மணிமேகலை கதாபாத்திரம் தானே தவிர, நான் அல்ல.

டெல்லியில் இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் ஒரு பெரிய போராட்டம் நடத்தினீர்கள். அதை படம் பிடித்து வைத்திருந்து செங்கடலில் சேர்த்திருக்கிறீர்கள். டெல்லி போராட்டம் இதற்காகவே திட்டமிட்டு நடத்தப் பட்ட நாடகம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே. இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
டெல்லிப் போராட்டம் மிகச் சாதாரண ஒளிப்பதிவுக் கருவியால் திரைப்பட ஒளிப்பதிவாளரல்லாத ஒருவரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. படத்தில் இணைக்கும் போது இத்தகைய காட்சிகள் தொழில்நுட்ப ரீதியாக குறைபாடுள்ளவையாகவே இருக்கும். 500 துணைநடிகர்களை வைத்து செட் போட்டுக் கூட இந்தக் காட்சியை எடுத்துப் படத்தில் தொழில்நுட்பக் குறைபாடில்லாமல் இணைத்திருக்கலாம். கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் டூப் போட்டு எடுப்பதுதான் சிரமம் எழுத்தாளர்களை டூப் போட்டு எடுப்பது ஒன்றும் சிரமமல்லவே. ஆனால் முடிந்தளவு உண்மையான காட்சிகளையே பயன்படுத்த செங்கடல் விரும்பியது. அரசியல் இயக்கங்களின் போராட்டங்கள், கலைஞர் உண்ணாவிரதம், நடிகர் சங்க போராட்டம், முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் என. போர் நிறுத்தம் கோரிப் போராடிய உலகம் தழுவிய எல்லா எதிர்ப்பு  இயக்கங்களையும் செங்கடல் பதிவு செய்கிறது. அதில் 30 நொடிகள் வந்து செல்கிறது டெல்லி போராட்டம். டெல்லி போராட்டக் குழுவில் இருந்த அநேகம் பேர் திரைப்படத்தைப் பார்த்து இதுவரை தங்கள் சாலிடாரிட்டியையே தெரிவித்திருக்கிறார்கள்.

நாலு பேர் சேர்ந்து ஏதாவது செய்தாலே, அங்கு குண்டு வைத்துவிட்டு ஓடி ஒளியும் நாசகார கும்பல் காலச்சுவடு. அதன் ஆள்காட்டி விரலை வெட்டியும், ஆணவம் அடங்கவில்லையென்றால், அதன் பின் நிற்கும் முதுகெலும்பில்லாத எழுத்தாளர்கள் தான் காரணம், திரைப்படம் தொடங்குவது, போர்க்காலங்களில், மொபைல் போனில் எடுக்கப்பட்ட போர்க்குற்றக் காட்சிகளோடு! இன்று இலங்கை அரசை சர்வதேச மனித உரிமை ஆணைய நீதிமன்றத்தில் நிற்க வைத்திருக்கும் ஃபுட்டேஜ். நீங்கள் பார்த்தீர்கள் தானே? ராணுவத்திடம் குண்டடி படுபவர்களிடமும், போர்க்குற்றம் புரியும் இலங்கை ராணுவத்திடமும் அனுமதி பெற்றீர்களா என்று காசு கண்ணன் கேட்டாலும் கேட்கக் கூடும்.

உங்கள் தனியறை காட்சி அவசியமா. ஒரு அரசியல் திரைப்படத்தில் நீங்கள் அப்படி தோன்றியிருப்பது பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கியிருக்கிறது. ஏன் அதைச் செய்தீர்கள்?

ஏங்க, இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சூரி, படம் முழுக்க அரை நிர்வாண்மாகத் தான வருவார். ஏதாவது கேள்வி வந்ததா? இலங்கை நேவி என்கவுண்டர் காட்சிகளில் ஆணுறுப்பு தெரியும் வகையில் நிர்வாணக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தேவை கருதி தானே வைத்திருக்கிறோம், ஒரு பெண் கதாபாத்திரம், தன் தனியறையில் இருக்கும்போது உள்ளாடையோடு கண்ணாடியில் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறார். இதில் ஏன் எல்லாருக்கும் பிரச்சினை வருகிறது. அரசியல் படமென்பதால், பெண் கதாபாத்திரங்கள் எல்லாம் பர்தா போட்டு கொண்டு வரவேண்டுமா?

சர்வதேச அளவில் இந்தப் படம் என்ன விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது?

டர்பன், டோக்கியோ, மாண்ட்ரியல், மும்பை சர்வதேச திரைப்பட விழாக்களில் போட்டிப்பிரிவில் பங்கு பெற்றது. டோக்கியோவில் சிறந்த ஆசியப் பெண் திரைப்பட விருதை வாங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக சியோல், தாய்பெய், பீஜிங். இஸ்ரேல் நாடுகளில் பங்கேற்கிறது. டர்பன் திரைப்படவிழாவில் செங்கடல் படத்தை பார்த்த ஐ. நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் திருமிகு. நவி பிள்ளை ”ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய கடலோர எல்லைப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறலுக்கான ஒரு சாட்சியமாக, சமரசமற்ற குரலாக செங்கடல் ஒலிக்கிறது” எனக் குறிப்பிட்டார். இலங்கை அரசின் தமிழினப்  படுகொலைகள் மீதான ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின்  விசாரணையோடு இந்திய மீனவர்களின் படுகொலை மீதான தலையீட்டிற்கும் ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.

சென்னைத் திரைப்பட விழாவில் உங்கள் படத்தை திரையிட அனுமதிக்கவில்லை. நீங்கள் போராடியே அனுமதி பெற வேண்டியிருந்தது? இது ஏன் நிகழ்கிறது? தொடர்ந்து இப்படி போராடிக்கொண்டே இருப்பது சோர்வைத் தரவில்லையா?
திரைப்பட விழாக்கள் முற்போக்கு மரபுவழி வந்தவை. அவற்றில் தணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை. கருத்துச் சுதந்திரம் தான் ஒரு திரைப்பட விழாவின் ஆன்மா. அந்த பண்பாட்டை சீரழிக்க இடமளிக்க முடியாது. அங்கே படைப்பையும், படைப்பாளரையும் அவமதித்து விட்டு அதிகாரத்திற்கு என்ன வேலை? இந்த வருட இந்தியன் பனோரமாவில் தேர்வான ஒரே தமிழ்ப்படம் செங்கடல். ஆனால் விழாக்குழுவினர் இந்தியன் பனோரமாவில் தேர்வான மற்ற மொழிப்படங்களையெல்லாம் திரையிடும்போது, செங்கடலை விலக்கியது அப்பட்டமான தணிக்கை. தணிக்கையை சட்டப்போராட்டத்தில் வென்ற பின்னும், பனோரமா அங்கீகாரம் பெற்ற பின்னும், பண்பாட்டு வெளியில் தணிக்கை செய்வதென்பது எவ்வளவு மோசடி? அரசியல் விவாதத்திற்கு அஞ்சுபவர்கள் திரைப்பட விழா நடத்த வேண்டிய தேவையென்ன? மந்திரி விழா, முதல் மந்திரி ஆசி பெற்ற விழா, தயாரிப்பாளர்கள் சங்கமே கூடியிருக்கிற விழா அதனால் அவமதிக்க கூடாது என்று விழாக்குழுவுனர் சார்பாக சரத்குமார், சுகாசினி எல்லாம் பேசினார்கள். அதிகாரம் கையையும் வாயையும் கட்டிக் கொண்டு நிற்கும் இடம் தான் கலை. இதை இந்த சந்தை முதலைகளுக்கு நாம் கூப்பாடு போட்டுத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

படம் எடுக்க செலவிடும் ஆற்றலைவிட பல மடங்கு ஆக்டிவிசத்தில் தான் கழிகிறது. சோர்வு ஏற்படாமல் எல்லாம் இல்லை. ஒரு மூன்றாம் உலக, மேல் சாதியல்லாத, பணபலம்-ஆள் பலம்-அரசியல் பலம் எல்லாம் இல்லாத கறுப்பு பெண் சுயாதீன திரைப்பட இயக்குநராவதென்றால், எளிதாக நடந்துவிடுமா என்ன?

விடுதலைப் புலிகளுக்கு எதிரானது இந்தத் திரைப்படம் என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?


விடுதலைப்புலிகள் எந்த மக்களுக்காக ஆயுதம் ஏந்தினார்களோ, அந்த மக்களையே மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்பதை பாதிக்கப்பட்ட மக்களின் வாய்மொழியாக கேட்டவள் நான். தமிழீழம் என்ற கனவு கொடூரமாக கலைக்கப்பட்டதற்கு இனவாத இலங்கை அரசாங்கமும், பிராந்திய அரசான இந்திய அரசாங்கமும் எவ்வளவு காரணமோ, அவ்வளவு காரணம் புலிகளும் தான். இந்த உண்மையை வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மக்கள் செங்கடல் மூலம் சொல்கிறார்கள். இதற்கு தார்மீகமான ஊடகமாக இருந்ததற்காக இனத்துரோகி, தேசத்துரோகி இன்னும் எல்லா பட்டங்களையும் ஏற்க நான் தயார். ஏனெனில் அனாவசியமாக ஒரு மனித உயிர் சாவதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அடித்தட்டு மக்களின் வாழ்வாதைகளுக்கும், இங்கு நடக்கும் அரசியலுக்கும், அது பாடும் போர்ப்பரணிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை சொல்ல எடுத்த முயற்சியே செங்கடல்.

சென்னைத் திரைப்பட விழாவில் உங்கள் படம் மட்டுமே அரங்கு நிறைந்த காட்சியாக நிகழ்ந்தது.. இது உங்களுக்கு என்ன உணர்வைத் தருகிறது?
மகிழ்ச்சி. செங்கடல் இன்னும் தமிழக திரையரங்குகள் தோறும் வினியோகிக்கப்பட்டு, அரங்குகள் நிறைந்தால் இன்னும் மகிழ்வேன். கடுமையான சென்சார் போராட்டத்தை அரச அதிகாரத்தோடு, சட்டத்தின் உதவி கொண்டு தொடுக்க முடிந்தது. ஒரு வெட்டு கூட இல்லாமல், திரைப்படத்தின் ஆன்மா கெடாமல் வெளியே கொண்டு வர முடிந்தது. ஆனால் சந்தை என்ற அசுர சக்தி ஆளையே தடயமில்லாமல் அழிக்கவல்லது. ஆனாலும் பின்வாங்குவதாக இல்லை. கிரவுட் ஃபன்டிங் (crowd funding) மூலம் கழைக்கூத்தாடியின் உண்டியலை கையிலெடுக்கிறேன். என் பார்வையாளர்களை பவர் புரோக்கர்ஸின் உதவி இல்லாமல் நேரடியாக இன்டர்நெட்டில் சந்திக்கிறேன். மக்களே படத்தின் விநியோகத்தைக் கையிலெடுத்து செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்கிறேன். அறிவிப்புச்செயதி கூடிய விரைவில் வரும்.