Thursday, March 13, 2014

வெள்ளை வேன் வளர்ந்த கதை - வல்லினம் நேர்காணல்

நன்றி - நவீன் 

Link : http://vallinam.com.my/version2/?p=915


லீனா மணிமேகலையை வல்லினம் இதழுக்காக சிறு நேர்காணல் செய்தேன். தமிழில் கலையில் தீவிரமாக இயங்குபவர்கள் கவனிக்கப்படுவதே இல்லை என்ற எண்ணம் மீண்டும் தோன்றியது. 'வெள்ளை வேன் கதைகள்' ஆவணப்படம் உருவான கதை  இந்த நேர்காணலில் அத்தனை சுவாரசியமாய் வெளிப்பட்டுள்ளது. தான் இயங்கும் ஒரு கலையின் மீது தீராத காதலும் கட்டற்ற தீவிரமும் கொண்ட ஒருவரால் மட்டுமே லீனா போல இயங்க முடியும். இதையே ஐரோப்பிய நாட்டில் ஒருவர் செய்திருந்தால் தொலைக்காட்சிகள் அவரது நேர்காணலையே ஓர் ஆவணப்படமாக மாற்றியிருக்கும். இது சபிக்கப்பட்ட இனம். இங்கு முயற்சிகள் மேல் அவதூறுகள் மட்டுமே விழும். லீனா தொடர்ந்து மாற்று சினிமா முயற்சிகளில் இயங்க வேண்டும் என்பதே நமது ஆவல்.

- .நவீன்

உங்களது இலங்கை பயணம் குறித்த அனுபவத்தைச் சொல்லுங்கள் லீனா?

இலங்கைக்கு சில தடவைகள் இதற்கு முன்னமே வெவ்வேறு அலுவல் நிமித்தம் சென்றிருக்கிறேன். வடக்குப் பகுதிகளுக்கு இதுவே முதல் தடவை. இலக்கிய சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நிகழ விருக்கிறது என்று அறிந்த கணத்திலேயே பயணத்தை உறுதி செய்துக்கொண்டேன். ஒரே இடத்தில், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப்  படைப்பாளிகளை சந்திக்க முடிகிற சாத்தியக் கூறுகள் கொண்ட இலக்கிய சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் என்னை வசீகரித்ததுதிரையிடல், கவிதை வாசிப்பு, புத்தக வெளியீடு, கருத்தரங்கம் என்று எந்த நிகழ்ச்சியிலும் பதிவு செய்துக்கொள்ளாமல், பார்வையாளராகவே சென்றேன். இரண்டு நாள் அமர்வுகளிலும் நிறைய கற்றுக்கொண்டேன். தொடர்ந்த வாசிப்பாலும், திரைப்பட விழாக்களுக்காக ஐரோப்பா, கனடா சென்ற போதெல்லாம் சந்தித்த புலம் பெயர் தமிழர்களின் நட்புகளாலும், ஈழத்து படைப்பாளிகள் தமிழகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பங்களில் நடந்த விவாதங்களாலும் , செங்கடல் படப்பிடிப்பின் சமயம் பேட்டி கண்டு, அறிமுகமாகி , கூட வேலை செய்த நூற்றுக்கணக்கான ஈழத்து அகதிகளின் மூலமும் அறிந்திருந்த ஈழத்தமிழர் வாழ்வை, நேரில் கண்டறியும் ஆவலும் இந்தப் பயணத்திற்கான முக்கிய உந்துசக்தி. வாசிப்பில் அறிமுகமான கருணாகரனையும், நிலாந்தனையும், யோ கர்ணனையும், லெனின் மதிவாணத்தையும், திலகரையும், ரியாஸ் குரானாவையும், சந்திரலேகா மௌனகுருவையும், பைசலையும்  இன்னும் பெயர்களாக மட்டுமே அறிந்திருந்த பலரையும் ஒரே இடத்தில், நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் இலக்கிய சந்திப்பு ஏற்படுத்திக்கொடுத்தது

போர் தின்ற நிலத்தின் கதைகளை, தினம் தினம் களம் நின்று வாழ்ந்து கடப்பவர்களின் வார்த்தைகளில் கேட்டதும் அறிந்ததும் மிகப் பிரத்யேகமான அனுபவம். அன்பாலும் நட்பாலும் கட்டுண்ட நாட்களவை. ஈழம் பற்றிய தமிழக தமிழ் தேசியவாதிகளின் புனைவுகளையும் கட்டுக்கதைகளையும் முற்றிலுமாக களைய, இப்படியான ஒரு இலக்கிய சந்திப்பை தமிழகத்திலும் நடத்த வேண்டுமென்ற கோரிக்கையைக் கூட அங்கு நான் வைத்தேன். தமிழ்த் தேசியம், மலையாக இலக்கியம், முஸ்லீம் படைப்புகள், தமிழர்கள் பற்றிய சிங்கள இலக்கியப் படைப்புகள், தலித் இலக்கியம், திருநங்கையர்கள் மற்றும் பாலின சிறுபான்மையினர் பற்றிய கலந்துரையாடல் என்று எல்லாத் தளங்களிலும் நடந்த உரையாடல்கள் எனக்கு நல்ல பாடங்களாக இருந்தன. இப்படியான உரையாடலைத் தானே போர் அழித்திருந்தது. அந்த வகையில் 41வது இலக்கிய சந்திப்பு முக்கியமானது என்பது என் கருத்து. ஆங்கிலத்தில் இந்து நாளிதழ், கஃபிலா, கொழும்பு டெலிகிராஃபிலும், தமிழில் தீராநதி அந்திமழை போன்ற பத்திரிகைகளிலும், மலையாளத்தில் மாத்ருபூமியில் மொழிபெயர்ப்பாகவும் தொடர் கட்டுரைகளை எழுதினேன்

சந்திப்பிற்குப் பின்னால் எழுத்தாளர் நண்பர்களோடு ஒரு தடவை கிளிநொச்சியிலிருந்து முல்லைத் தீவு வரை முக்கியமான இடங்களை சென்று பார்த்தேன். ஒவ்வொரு இடத்திலும், இங்கு இத்தனை பிணங்கள் கிடந்தன, இந்த வளைவில் ராணுவம் வளைத்துப் பிடித்தது, இது மாத்தளன் பாக்ஸ், அது நாங்கள் சரண் அடைந்த இடம் என்று ஷெல்லடி தடங்கள் அழியாத வீடுகளின் ஊடாகவும், பனைகளின் இடையேயும், நண்பர்கள் சொன்ன விவரணைகள் காலத்தை காட்சிக்கும் சாட்சிக்கும் நடுவே நிறுத்தின. போர் ம்யூசியம் என்று புலிகளிடமிருந்து பறிக்கப்பட்ட ஆயுதங்களை குவித்து  வைத்திருந்தனர்.தலைமை இருந்த இடம், கடல்படை முகாமிட்டிருந்த இடம்பங்கர்கள் என்று எல்லா தடங்களையும் இலங்கை அரசாங்கம் தனக்கு  உகந்த வரலாற்றுக் குறிப்புகளை எழுதி காட்சிப்படுத்தியிருந்தது . மக்கள் நடமாட்டத்தை விட  மிலிட்டரி நடமாட்டம் அதிகமிருந்த வன்னிப் பகுதியில் , அரசாங்கம் போரை மக்கள் மனதிலிருந்து இன்னும் அகற்றாமல் வைத்திருந்ததுவவுனியாவில், கிறித்துவ பாதிரிமார்கள் நடத்தும் ஒரு ஷெல்டரில் போரால் பாதிக்கப்பட்ட  நூற்றுக்கணக்கான குழந்தைகளும், இளைஞர்களும், அங்கம் இழந்தவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் அடைக்கலம் பெற்றிருந்தனர். அவர்களோடு தன்னார்வப் பணி செய்த நாட்கள் மறக்க முடியாதவை. செய்தி தாள்களில் படிப்பது வேறு. ரத்தமும் சதையுமாக பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை நேரில் கேட்டறிவது வேறு தான். சக மனித வாழ்க்கையின் கோரத்தின் முன் கையாலாகாது நிற்பதை விட துயரம் தருவது  வேறென்னவாக இருக்க முடியும்தங்கள் உறவுகளைக்  காணாது , மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கிடையே உற்றோர் வந்து தேடித் போகும் காட்சியை அங்கு தான் முதலில் பார்த்தேன். பின்னர் எழுத்தாளர் தேவாவை சந்திக்க  தலைமன்னார் சென்றேன். செங்கடலுக்காக பாக் நீரிணையின் ஒரு முனையான தனுஷ்கோடியில் என் ஒரு வருட வாழ்வை செலவழித்திருந்தேன். பாக் நீரிணையின் மறுமுனையான தலைமன்னாரை பார்ப்பதும் , மீனவர்களை சந்தித்து 2009 போருக்குப் பின்னான புதிய சிக்கல்களைக் கண்டறிவதுமாக மன்னார் பயணம் அமைந்ததுமுப்பது வருடங்களுக்குப் பிறகு கூத்து நிகழ்த்திய கலைஞர்களை சந்தித்தது மறக்க முடியாத மிகழ்ச்சி. பேசாலையில் இருந்த நாட்களில் நான் மீன்பிடியையே பார்க்கவில்லை. பேசாலை வரை வந்து மீன் பிடிக்கும் இந்திய டிராலர்களும், ஏதிலிகளாக ஆஸ்திரேலியாவிற்கும் தப்பும் வழியில் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு அனுதினமும் கடலில் பிணமாய் மிதக்கும் கொடுமைகளும், மன்னார் பகுதி மீன் பிடி தொழிலை கடுமையாக பாதித்திருந்த சூழல்இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன் என்றதும் ஆத்திரமும் ஆதங்கமுமாக பேசினார்கள் மன்னார் மீனவர்கள். அதிகாரத்தில் இல்லாத படைப்பாளி என்ன செய்ய முடியும்? துயரத்தில் பங்கெடுப்பதை தவிர. அல்லது தன் படைப்பின் மூலம் அந்த துயரத்தை மற்றவர்களுக்கு கடத்துவதை தவிர

இலங்கை இலக்கியவாதிகளைச் சந்தித்தீர்களா? போருக்குப் பின்பான அவர்கள் மனநிலை என்னவாக இருந்தது?

கடுமையான தணிக்கை சூழ்நிலையிலும் இயங்கும் ஈழத்து படைப்பாளிகளின் தீரம் பிரமிக்கத்தக்கது. இழப்புகளும், இறப்புகளும், கொலைகளும், இடப்பெயர்வுமாய்  பாடுகள் நிறைந்த வாழ்க்கையில் எதோ ஒரு நூல் போன்ற நம்பிக்கையாய் எழுத்தை பிடித்துக்கொண்டு இயங்கி வரும் அவர்களைப்  பார்க்க பார்க்க மலைப்பாய் இருந்தது. பேரினவாத அரசாங்கம் அழிக்க நினைக்கும் வரலாறை அவர்களே தங்கள் படைப்புகளில் கடத்துகிறார்கள். பாசிசத்திற்கு எதிராக  தங்களிடமிருக்கும் ஒவ்வொரு வார்த்தையாலும் வினையாற்றுகிறார்கள். எதிர்த்தால் குண்டு பாயும், காணாமல் போகடிக்கப் படுவோம் என்று தெரிந்தும், களமாடுகிறார்கள். குண்டுகள் விழவில்லை, கிபிர் பறக்கவில்லை, ஆனால் தணிக்கை, ராணுவ நிர்வாகம், என்று போரின் வேறு வடிவங்கள் அன்றாட வாழ்வாக இருக்கும் நிலை படைப்பாளிகளை அச்சுறுத்தலிலேயே தான் வைத்திருக்கிறது.  

பொதுவாக போர் முடிந்துவிட்ட நிலையில் அதை தமிழ் மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளனர் என அறிய முடிந்ததா?

காணாமல் போன உறவுகள் திரும்பும் வரை போர் முடிந்தது என்று சொல்ல முடியாதென்பது தான் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலை. இன்னும் ஷெல் துண்டுகளை உடலில் ஏந்திக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கும் மக்கள் தொகை ஒருபக்கம். வாழ்வாதாரங்கள் முற்றிலும் ஒழிந்த நிலையில் இரண்டு வேளை உணவுக்கும் வழியில்லாத பெரும்பான்மை. வளர்ச்சி என்ற பெயரில் கார்பட் ரோடுகளும், மொபைல் கம்பெனிகளும், ஊன்றுவதற்கு பற்றுதல் கிடைக்காத மக்களை மேலும் மன அழுத்தத்திற்கு தள்ளும் சூழல். போரில் அங்கம் இழந்தவர்களின் புள்ளி விவரங்களையே கணக்கிலெடுக்காத அரசாங்க நிர்வாகம். பொழுதும் ராணுவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய கொடூரம். நில அபகரிப்பு, கலாசார ரீதியான சிங்கள காலனியாதிக்கம், சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசாங்கம் இருந்தும் அரசியல் அதிகாரம் ஏதுமில்லாத கொடுமை. புத்த மதமே வழக்கில் இல்லாத வடக்குப் பகுதியில், அரை மைலுக்கு ஒரு புத்த கோயில் மற்றும் அதன் வாயிலில் துப்பாக்கி ஏந்திய ராணுவ சிப்பாய். இதற்கு நடுவே ஊசலாடுகிறது தமிழ் வாழ்க்கை.

ஈழம் குறித்த தமிழகத்தின் 'புரட்சிக்குரல்கள்' அங்கு கொஞ்சமேனும் எட்டியுள்ளதா

தமிழகத்தின் வாய்ப்பந்தல் போலிகளை  மிகச் சரியாக எடை போட்டு வைத்திருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள். தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் ஈழம் என்ற சொல்லை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு சனங்களுக்குதான் சீன் போட முடியும். அங்கு இவர்களின் பருப்பு வேகாது. இலங்கைக்கு சென்று வந்தபின் ஈழப்பிரச்சினைக்கு முதலில் தமிழகத்து தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று தோன்றியது. எவ்வளவு பொய்கள், எத்தனை கட்டுக்கதைகள். இலக்கியம், இணையதளம் என்று இந்த கிருமிகள் பெருகிவிட்ட சூழல், உண்மையில் ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்கு எதிரானது. தமிழகத்தின் சனநாயக சூழலுக்கும்  ஆபத்தானது. ஈழப்பிரச்சினையின் உண்மைகளைப் பேச நடக்கும் சிறு முயற்சிகளைக் கூட தங்கள் அவதூறு அரசியலாலும், அடாவடி கலாசார தணிக்கை நடவடிக்கைகளாலும் முடக்குகிறார்கள். ஆனால் உண்மைகளை உடைத்துப் பேசும் வரை, உரையாடல் தளத்திற்கு விவாதங்கள் வராத வரை ஈழத் தமிழர் உரிமைக்கோ, நலனுக்கோ எந்த ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் யாராலும் செய்ய முடியாது

வெள்ளை வேன் கதைகள்  என்ற ஆவணப்படம் உருவான விதம் குறித்து கூறுங்கள்?

நான் இலங்கை செல்லும் போது, படம் எடுக்கும் எந்த தயாரிப்புகளுமற்றுதான் சென்றேன். ராணுவத்தின் பிடியில் இருக்கும் வடக்கு - மக்களின் ஒவ்வொரு அசைவையும், கண்காணிக்கும் உளவுத்துறையால் நிறைந்த பகுதி. சி..டி என்ற வார்த்தை இரண்டு பேர் சந்தித்துப் பேசினாலே சில தடவைகளாவது உச்சரிக்கப்பட்டுவிடும். என் பாஸ்போர்ட் விபரங்கள் ஒரு பத்து தடவையாவது வெவ்வேறு செக் போஸ்டில் பதியப்பட்டிருந்தன . இதில் படமெடுப்பதை பற்றி எல்லாம் கிஞ்சித்தும் எண்ணம் வருவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது

ஜூலையில் மன்னாரில் இருந்தபோது, நவிப்பிள்ளை ஆகஸ்ட் மாதம் வருவதை முன்னிட்டு காணாமல் போன உறவுகளை, போராட்டத்திற்காக இணைத்துக்கொண்டிருந்த இயக்கத்தோடு நட்பு கிடைத்தது. மன்னாரில் இருந்து முல்லைத் தீவு வரை மறுபடியும் இரகசியமான ஒரு நீண்ட பயணம். கிட்டத்தட்ட 25 கிராமங்களில் , 500 குடும்பங்களை நேரில் சந்தித்து உரையாடிய அந்த ஆன்ம பயணம் தான் இந்தப் படத்திற்கு உரம். தன்னார்வளராக ஒளிப்பதிவு பணியை செய்ததோடு, சிங்கள மனித உரிமை ஆர்வலர்களும் எங்களுடன் பயணித்ததால், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினேன். களத்தில் நண்பர்கள் தொடர்ந்து வேலை செய்துக்கொண்டிருப்பதால், என்னையும், என் ஒளிப்பதிவாளர் அரவிந்தையும் பாதுகாத்து, உணவளித்து, இடமளித்து தங்கள் குடும்பம் போல பார்த்துக்கொண்ட நண்பர்கள் தொடர்ந்து களத்தில் வேலை செய்துக்கொண்டிருப்பதால் , அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி சொல்ல முடியாத துரதிருஷ்டசாலியாக நிற்கிறேன்

வெள்ளை வேன் கதைகள் என்று சுயாதீனமாக படம் எடுக்க வேண்டும் என்ற பொறி இரணபாலையில் ஜெயா அக்காவை சந்தித்த போதுதான் தட்டியது. இரணபாலை போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி. ஷெல் விழாத இடம் இல்லாததால், பொத்தல் நிலமாக காட்சியளித்த அந்த ஊரில் கூடுதலாக சில நாட்கள் தங்கி ஜெயா அக்காவின் கதையை ஆவணப்படுத்தலாம் என்று முடிவு செய்தேன். காணாமல் போன குடும்பங்களின் நம்பிக்கையும், பேரினவாத அரசாங்கத்தை விடாமல் சவால் விட்டுக்கொண்டிருக்கும் அஞ்சாநெஞ்சமும்  என்னையும் தொற்றிக்கொண்டது. இரண்டாவது நாளே ராணுவத்தால் பிடிக்கப்பட்டோம். குண்டடிகளால் துளைக்கப்பட்ட ஒரு ஐஸ் க்ரீம் வண்டியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை ஒரு புதரில் மறைந்து படமெடுத்துக்கொண்டிருந்த எங்களை வசமாகப் பிடித்துக்கொண்டார்கள். மூன்று மணி நேரம் யார் யாரோ வந்தார்கள் விசாரித்தார்கள். உடனடியாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்று மட்டும் இறுதியாக உத்தரவு வந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் கொழும்பு பஸ்ஸில் ஏறி, இந்தியா வந்து சேர்ந்தோம்

 எங்களுக்கு பாதுகாப்பாக இருந்த இலங்கை நண்பர்கள் எல்லோரும் மிகப்  பதற்றமாகி விட்டார்கள். இந்தியா வந்தும் எங்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. நானும் அரவிந்தும் ஒரு வாரம் குமைந்து தீர்த்தோம். மறுபடியும் விசா அப்ளை செய்து பார்த்தோம். கிடைத்தது. நவிப்பிள்ளை வருவதையொட்டி மீடியா நடமாட்டமும் சற்று நெகிழ்ச்சியும் இருந்த கால கட்டம். யாழ்ப்பாணம், கொழும்பு நகரங்களில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க, காணாமல் போனவர்களின் கவன ஈர்ப்பு போராட்டங்களை ஆவணப் படுத்தினோம். புத்தளம், மன்னார், கிளிநொச்சி, ஹோமாகாமா, நீர்க்கொழுப்பு, திரிகோணமலை என்று பூகோள ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரித்தாளப் படுகின்ற மக்களின் வாழ்க்கையை கேமிரா கொண்டு இணைக்க முயற்சி செய்தோம். காணாமல் போன குடும்பங்கள் போர்க்குற்றவாளி ராஜபக்சேவிற்கு தீராத தலைவலியை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். சர்வதேச அரங்கில் மிக மோசமான அழுத்தத்தை ராஜபக்சே அரசாங்கம் காணாமல் போனவர்களின் விவகாரத்தில் சந்தித்து வருகிறது. வெள்ளை வேன் கதைகள் காணாமல் போன உறவுகளின்  விஷுவல் ஆயுதம்.

குறைந்த வசதி, இராணுவ மிரட்டல் இவற்றுக்கு மத்தியில் உங்களாக எப்படி சவால் மிகுந்த கருத்தை முன்வைக்கும் ஓர்  ஆவணப்படத்தை எடுக்க சாத்தியமானது? உங்கள் அனுபவதைக் கூறுங்கள்?

பாதுகாப்பு காரணமாக நாங்கள் லாட்ஜில் எல்லாம் தங்க முடியவில்லை. சில நாட்கள் ராணுவத் தடுப்புகளை வீடியோ எடுப்பதற்காக  டாக்சி எடுத்தோமே தவிர்த்து, பெரும்பாலும் டவுன் பஸ்ஸில் தான் பயணம் செய்தோம். டேப்புகளைப் பறிமுதல் செய்தல், பல மணி நேரம் விசாரித்தல், படம் எடுக்க விடாமல் தடுத்தல் எல்லாமும் தான் நடந்தது. எப்படியெல்லாம் சமாளித்தோம் என்ற தந்திரங்களை எல்லாம் எழுதினால், நாங்கள் எப்படி மறுபடியும் படமெடுப்பது. ஆட்களையே  இராணுவம் ஸ்கேன் பண்ணும்போது கேமிராவை  அனுமதிக்குமா என்ன? எப்படியெல்லாம் அதிகாரத்தை ஏமாற்றலாம் என்பதை படத்தைப் பார்ப்பவர்கள் தெரிந்துக்கொள்ளலாம். இன்று நேற்றல்ல வரலாறு முழுக்க அரசாங்கங்களின் கண்ணில் விரல் விட்டே ஆட்டியிருக்கிறார்கள்  கலைஞர்கள்.

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை கோரிக்கைக்கான ஆதாரங்களில் ஒன்றாக இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சேனல் ஃபோர் ஒளிபரப்பும், கார்டியன் போன்ற மீடியாக்கள் எழுதும், ஜெனிவா திரையிடும். ஆனால் தமிழகத்தின் சில தமிழ்த் தேசிய அரசியல் இலக்கிய இணையதள சில்லுண்டிகள் மட்டும் அவதூறு செய்யும்! இது தான் தமிழகத்தின் வரம். தமிழகத்தின் சனநாயக வெளியை இந்த போலிகள் தங்கள் பொய் பிரசாரங்களால் அச்சுறுத்தி வைத்திருக்கிறார்கள். இலங்கைப் பிரச்சினையைப் பேசும் படம் என்றால், ஒரு தியேட்டர் கூட கிடைக்காத சூழல் தான் இன்று நிஜம். ஈழம் குறித்த புத்தகமா, ஹால் கிடையாது, ஈழம் குறித்த கட்டுரையா, ஐயோ வேண்டாம் என்ற கிலியை "இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள்" ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒருவித வன்முறைக் கலாசாரத்தை தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொண்டு சுற்றும் ஒட்டுக்குழுக்கள் உருவாக்கி, கமிசார்த்தனம் செய்துக்கொண்டிருக்கின்றன. இலங்கைக்கு செல்வதே அரசாங்கத்திற்கு துணை போகிற செயல் என்று சொல்லும் அபத்தத்தில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த முட்டாள்களின் பிராசாரங்கள். ஆனால் இந்த முட்டாள்கள் வெறும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் இப்படி  தொடர்ந்து அடாவடி செய்வதற்கும், அவர்கள் கட்டமைக்கும் புனைவுகளை களைத்து உணமைகளைப் பேச நினைக்கும் கலைஞர்களை அச்சுறுத்துவதற்கும், தாக்குவதற்கும், பின்னால் ஒரு ஆபத்தான அரசியல் இருக்கிறது

படம் பொதுப்பார்வைக்கு வரும் முன்னரே அது பல்வேறு அவதூறுக்கு உள்ளானது குறித்து கூறுங்கள். குறிப்பாக இந்தப் படம் இலங்கை அரசின் உதவியோடு தயாரிக்கப்பட்டது என்றும் இலங்கை அரசுக்கு எதிராகத் தன்னார்வக் குழு (குறிப்பாக தமிழ் தேசிய குழு) ஆதரவில் தயாரான படம் என்றும்  புலிகளின உதவியுடன் தயாரிக்கப்பட்டது என்றும்  கூறப்பட்டது குறித்து?

ஒரே படம் புலிகளாலும், இலங்கை அரசாங்கத்தாலும் தயாரிக்கப்படுவது எவ்வளவு பெரிய விஷயம் நவீன். நகைத்துவிட்டு போவதை தவிர வேறு வழி? படத்தைப் பார்த்தவர்கள் வைக்கும் விமர்சனத்தை பொருட்படுத்தலாம். சும்மா எதையாவது கழிந்து வைப்பவர்களின் உள்நோக்கங்கள் வேறுஎன் விளக்கங்கள் அவர்களை ஒருபோதும் சரிசெய்துவிட முடியாது.
ஆனால் அவதூறுகள் கொண்டு ஒரு படைப்பாளியை தொடர்ந்து தாக்குவதும், குணக்கொலைகள் செய்வதும்நம்பகத்தை சிதைப்பதும் மோசமான ஓடுக்குமுறை வடிவம். மனித உரிமை மீறல். தமிழத்தில் கருத்து சுதந்திரம் பேசுபவர்களே, இதிலும் தலைமை வகிக்கிறார்கள் என்பது நகைமுரண்

வெற்றிச்செல்வி எனும் பெண் போராளியைத் தவிர வேறொரு போராளியையும் நீங்கள் ஆவணப்படுத்தாத சூழலில் ஊடறு முன்வைத்த அவதூறுக்கு அவர்கள்கள் தரப்பு பதில் என்ன?

ஊடறுடாட்காம்  வெளியிட்டது ஒரு பொய் அறிக்கை. எந்த வித அறமும் இல்லாமல் அதை வெளியிட்டுவிட்டு, அதை அம்பலப்படுத்தியதற்குப் பிறகும் அக்கட்டுரையை அப்படியே வைத்திருப்பதோடு, வருத்தமோ, பதிலோ, தெரிவிக்காமல் திமிராக இருக்கிறார் ஊடறு ரஞ்சி. ஒரு இணையதளம் இருக்கும் அதிகாரத்தில், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்றால் மஞ்சள் பத்திரிகை நடத்திவிட்டு போகலாம். எதற்கு பெண்ணியம், ஈழ அரசியல் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்? கீற்று போன்ற எவ்வளவோ மஞ்சள் இணைய தளங்கள் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் மறுப்பா தெரிவித்துக்கொண்டிருகிறோம்?

ஊடறுவுக்கு உங்கள் மறுப்பை ஓர் நிகழ்வு நடந்த மண்டபத்தில் காட்டுவதற்கு முன் வேறென்ன வகையான முறைகளில் முயன்றீர்கள்? அதற்கு ஊடறுவின் பதில் என்னவாக இருந்தது

ஊடறுடாட்காமின்  பொய் அறிக்கையை அம்பலப்படுத்தி தோழர் ஷோபா சக்தி விரிவான எதிர்வினை கட்டுரை ஒன்றை எழுதினார்(http://www.shobasakthi.com/shobasakthi/?p=1087). அதற்கு எந்த பதிலும் இல்லை. தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் நான் எழுப்பிய கேள்விகளுக்கும் மௌனம்தான். அந்த அறிக்கை வெளியான உடனேயே, பலர் அதைப் பகிர்ந்திருந்தனர்லண்டனில் யாழ்ப்பான இலக்கிய சந்திப்பு நடப்பதை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்த குழுவினர் அதில் பெரும்பாலானவர்கள். நான் யாழ்ப்பாண சந்திப்புக்கு சென்றதையொட்டி என்னைக் கட்டம் கட்டிய வேலை தான் இந்த அறிக்கை குப்பை. நான் எந்தக் குழுவையும் சேராதவள். யாழ்ப்பாணத்தில் ரஞ்சி இலக்கிய சந்திப்பு நடத்தியிருந்தாலும் நான் நிச்சயம் சென்றிருப்பேன். வெள்ளை வேன் கதைகள் படத்தை ரஞ்சி தன் குழுப்  பகைக்கும் சல்லித்தனங்களுக்கும் பலிகொடுப்பது அயோக்கியத்தனம். அடிப்படையில் அவர் செய்தது எனக்கெதிரான, என் படத்திற்கெதிரான  நடவடிக்கை அல்ல, காணாமல் போன உறவுகளுக்கு எதிரானது

வெள்ளை வேன் கதைகள் குறித்து இதுபோன்ற பிரசாரங்களில் ஈடுபடுபவர்கள் ஒரு வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு, அரச பயங்கரவாதத்திற்கு துணை போகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கிறேன்

உங்களை ஒரு வன்முறையாளராகச் சித்தரிப்பது பற்றி

இரண்டு நாள் அமைதியான போராட்டம், அப்புறம் லத்தி சார்ஜ் என்ற ரீதியில் 'அரசு' என்ற பேராசிரிய அதிகார "ஆணை" ஏவி என் மீது வன்முறை நிகழ்த்திய "பெண்ணிய உரையாடல்  பெண்ணியவாதிகள்" என்னை வன்முறையாளராக சித்தரிப்பது வேடிக்கைதான். முப்பது மாணவர்களை அடியாட்கள் போல பயன்படுத்தி ஒரு சக படைப்பாளியை உடல் ரீதியாக வெளியேற்றியதற்கும் கேமிராமேனை அடித்து கேமிராவைப் பறித்து மெமரி கார்டை அழித்ததற்கும் மார்க்ஸ் தோழர் சொன்னது போல சட்டப்படி அணுகி இருக்க வேண்டும். கலை இலக்கியம் தட்டி நோட்டீஸ் என்று சுற்றுபவளை அதிகாரம் வன்முறையாளராக தானே சித்தரிக்கும்

ஏன் இதே ரஞ்சி தன் ஊடறு.காமில் , மங்கை நடத்திய நாடகத்தால் பல திருநங்கைகள் உயிருக்கு ஆபத்து என்று எழுதட்டுமே? ரேவதி ராதாகிருஷ்ணனின் என்.ஜி. நடத்தும் பள்ளியால் சுனாமி குழந்தைகளுக்கு பெரிய பிரச்சினை என்று எழுதட்டுமே? அப்போதும்  அது அவரவர் சொந்தப் பிரச்சினை என்று மங்கை அவரை அழைத்து பெண்ணிய உரையாடல் நடத்துவாரா? அவதூறாளரைக் காப்பாற்ற பெண்ணியத்தை அடகு வைப்பாரா? என் கைவிரல் கூட அவர்மீது படாத நிலையில் ,கணவரைக் காப்பாற்றுவதற்காக கை வீங்கியது நகம் பிய்ந்தது என்று பொய் சொல்லிக்கொண்டு சிரியல் டிராமா போடுவாரா

அரசு அவர்களின் வன்முறையை கண்டித்து கிட்டத்தட்ட நூறு படைப்பாளிகள் கையெழுத்திட்டிருக்கும் அறிக்கை வெளிவந்திருக்கிறது.சுட்டி இது தான்: http://ulaginazhagiyamuthalpenn.blogspot.in/2014/01/blog-post_3541.html

வல்லினத்தில் தொடங்கிய விவாதத்தை மாலதி பன்மெய்யிலும் தொடர்ந்திருக்கிறாரே?

அவர் ஆண்டை அடிமை என்றும் டாட்டா என்றும் பொருமலும் பொறாமையுமாய் தன் இணையதளமான உயிர்மெய்யில் உளறியதோடு நிறுத்தியிருக்கலாம்.நூறு பேர் கூடி தேரிழுத்த ஈழத்தமிழர் தோழமைக் குரலையும் சந்திக்கு இழுத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார். 2009 ல் ஈழத்தமிழர் தோழமை குரலின் போராட்டங்கள் நடந்த காலத்திலேயே  அது புலிவாலாக இல்லை என்ற காரணத்தால் அதை தாக்கிய தமிழ்த் தேசிய ஒட்டுக்குழுக்களிடம் கையொப்பங்கள் வாங்கி தலையும் இல்லாத வாழும் இல்லாத ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்.  விவாதம் விவாதமாக இருக்கும் வரை உரையாடலாம் நண்பா. அது தனிநபர் தாக்குதலாக, மன நோய் முற்றிய பினாத்தலாக மாறும் போது, பார்த்து பரிதாபப்படலாம். மாலதியின் வாசகராக அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லும் பணியை  ஏற்றுக்கொள்ள நான் தயாராய் இருக்கிறேன்


தமிழில் தொடர்ச்சியாக இயங்கும் என்னை வெறும் வாய்ச்சொல் வீரர்கள், இயக்கம் சலித்தவர்கள், நான் செய்ய முடிந்ததை செய்ய இயலாதவர்கள்தங்கள் பொய்களால் , அவதூறுகளால் தாக்குகிறார்கள். அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்ற அறிவுரை எனக்கு தொடர்ந்து சொல்லப்படுகிறது. எதிர்ப்பும் செயலூக்கத்தின் ஒரு பகுதியே! பேசுபொருளாக மாறும்போது பொது அபிப்ராயங்கள் மாறுமே , எந்த குழுவிலும் நம்மை சேர்த்துக்கொள்ளாமல் தனிமைப்படுத்துவார்களே , அவமதிப்பார்களே என்றெல்லாம் அஞ்சிக்கொண்டு எதிர்ப்பு செய்ய வேண்டிய இடத்தில் எதிர்க்காமல் அநீதிக்கு முன் மண்டியிடுவது படைப்பாளிக்கு அழகல்ல

_________________________________________________________________________________